மனிதர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் மட்டுமல்லர். எப்போதும் உணர்வு வயப்பட்டவர்களும் கூட. மனித வாழ்க்கையில், சொந்தங்களும் நாம் அவற்றின் மீது கொண்டுள்ள பந்தங்களும் இன்றியமையாதது என்றே தோன்றுகிறது. வாழ்வின் பல சூழ்நிலைகளில் நாம் எதோ ஒரு வகையில் உணர்ச்சி வசப்பட்டு நம் உறவுக்காரர்களின் மேல் கோபங்கொண்டு அவர்களை வெறுத்து ஒதுக்குவதுண்டு. சில காலம் கழித்து இயல்பாகவே நம் பகையை மறப்பதுண்டு.
கோபங்களை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியும் சில சமயங்களில் கைகலப்பு செய்தும் நாம் பகையை பிரசவித்துக்கொள்வோம். கிராமங்களில் இன்றும் பங்காளிகள் சண்டையும், கொண்டான் கொடுத்தான் பகையும் அவ்வப்போது நிகழ்வது இயல்பே. சில குடும்பங்கள் தங்கள் பகையை, பெரிதுபடுத்திகாட்டாமல் எதிரியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்வார்கள். யாரேனும் இது குறித்துக் கேட்டால் எங்களுக்குள் சின்ன மனஸ்தாபம் அதனால் பேசிக்கொள்வதில்லை என்பர்.
பங்காளிகள் சண்டை பெரும்பாலும் சொத்து தகராறினால் ஏற்படுவதுண்டு. ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி எனும் கூற்றை இது போன்ற சொத்து விவகாரங்களில் நிரூபித்துவிடுவார்கள். பிரச்சணையின் சாராம்சம் மற்றும் அதை அவர்கள் கையாண்டவிதன்களைப் பொறுத்து மீண்டும் அவர்கள் இணையும் காலம் அமையும். பல சமயங்களில் இவர்களுக்குள் அடித்துக்கொண்டாலும், வேறு எவரோ ஒருவர் தன பங்காளியை சீண்டி அடிக்க முயலுபோது பெரும்பாலும் தன் பங்காளியை விட்டுக்கொடுக்காமல் எதிரியை நேரிடையாகவே "என்னடா, அவனை அடிச்சா கேட்க யாரும் இல்லையின்னு நினைச்சியா?" என்று கேட்டு மிரட்டுவர்.
கொண்டான் கொடுத்தான் என்பவர்கள் பெண் கொடுத்தோ அல்லது பெண் எடுத்தோ உறவை உருவாக்கி கொண்டவர்கள். இவர்களுக்குள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் ஏற்பட்டு பகையாகி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பதாலோ என்னோவோ கையாலோ அல்லது ஆயுதம் கொண்டோ தாக்கி கொள்வதில்லை. விவகாரப் பேச்சு வார்த்தைகள் முற்றி பகைமை பாராட்டுவார்கள். இது போன்ற பகைகள் காலப்போக்கில் அந்தந்த வீட்டுப் பெண்களாலேயே சரி செய்யப்பட்டுவிடும் அல்லது அந்த வீட்டுப் பிள்ளைகள் நட்பாகி இணைந்துவிடுவார்கள்.
இதுபோன்ற பகைகளை சில நேரங்களில் காலம் தீர்த்துவைத்தாலும், பல நேரங்களில் காலன்(எமன்) தீர்த்து வைத்துவிடுவான். ஆம், மரணம் விட்டுப்போன உறவுகளை சேர்த்து வைத்துவிடும். என்னதான் பகையாக இருந்தாலும், அவரவர்களின் இரத்தம் பாசம் கலந்தபடியே ஓடிக்கொண்டிருக்கும். இதனால் தான் அவர்கள் என் இரத்த சொந்தங்கள் என்று கூறுவதன் அர்த்தம் புலப்படும்.
இவ்வாறான, இரத்த சொந்தத்தில் எவருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது ஒருவரின் உயிருக்கு பங்கம் என்றாலோ, பகையாக இருப்பினும் பாசம் விட்டுக்கொடுக்காது. பகை உருவாகும்போது நாம் நிதானமாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் நமது எதிர்ப்பையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தியிருந்தால், பகை மறந்து உறவு சேரும் காலத்தில் மனங்கள் ரணங்கள் இன்றி எளிதாக சேரக்கூடும். ரணங்கள் அதிகமிருப்பின் எக்காலத்திலும் உறவுகள் சேர பிற மனிதர்களின் முயற்சி தேவைப்பட்டுவிடும். "என்னையா பெருசா பகை. என்ன இருந்தாலும் அவன் உன் பங்காளி. அல்லது கொண்டான் கொடுத்தானுக்குள்ள இதெல்லாம் சகஜம். போகும்போது என்னத்தையா கொண்டு போகப்போறோம்?" என்று கூறியோ "அங்காளி பங்காளினா இதெல்லாம் இருக்கத்தான்யா செய்யும்" என்று கூறியோ பல மனித மனங்கள் நம் மனங்களோடு சமரசத்தை சாத்தியமாக்க முயலும்.
மரணத்தின் வலிகள் உணர்ந்த நமக்கு இதுபோன்ற தருணங்களில் அது தன் வலிமையையும் உணர்த்திவிடும். அரசியலில் மட்டுமல்ல, நமது வாழ்விலும் உறவும் பகையும் நிரந்தரமல்ல என்பதை இந்த மரணங்கள் நிரூபித்துவிடும். உணர்வுகளுடன் வாழப்பழகினால் உறவுகள் என்றும் சாத்தியமே.